Thursday, August 14, 2008

இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்


“ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்”-1915 நவம்பர் 17ம் நாள் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட கத்தர் இயக்க வீர இளைஞன் கர்த்தார்சிங் தூக்கு மேடை முன் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை.

“நாளைக்காலையில் மெழுகுவர்த்தி ஒளி மங்குவதுபோல நானும் காலை ஒளியில் கரைந்து மறைந்து விடுவேன்,ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் குறிக்கோள்கள், உலகத்தைப் பிரகாசிக்க செய்யும்.இன்றுபோய் நாளை மீண்டும் பிறப்போம்.எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்”-தூக்கிலேறு முன் கடைசியாக தன் தம்பிக்கு எழுதிய கடிதத்தில் பகத்சிங் இப்படி கூறினார்.

‘அவனுக்கு அது தகும்.அவந்தான் உண்மையில் குற்றவாளி.என் நாட்டு மக்களின் உணர்ச்சியை நசுக்க பார்த்தான்.என் தாய் நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது என்பதை விடப் பெருமை வேறென்ன இருக்க முடியும்?இருபத்தோரு வருடங்கள் இதற்காக நான் காத்திருந்தேன்.-ஜாலியின்வாலாபாக் படுகொலைக்கு காரணமாக இருந்த பஞ்சாப் கவர்னர் மைக்கேல் டயரை லண்டனில் சுட்டுக் கொன்ற உத்தம்சிங் தூக்கிலேறுமுன் சொன்ன வார்த்தைகள் இவை.

1932ஆம் ஆண்டு ஜனவரி 11ல் திருப்பூர் குமரன் என்னும் 28வயது இளைஞன் வெள்ளயரை எதிர்த்து மறியல் செய்தபோது தடியால் அடித்து கொல்லப்பட்டான்.மூளை சிதறியபோதும் பற்றிய மூவர்ணகொடியை சிதறாமல் பிடித்து கொண்டே வீர மரணமடைந்தான்.ஒரு ஊர்வலம் கூட இல்லாமல் வேட்டியில் தொட்டிகட்டி அவன் சடலம் உறவினரால் புதைக்கப்பட்டது.

இத்தகய ஆயிரம் ஆயிரம் இந்திய இளையர்களின் தியாகத்தாலும் ரத்தத்தாலும் எழுதப்பட்டது தான் நவ இந்தியாவின் விடுதலை வரலாறு.ஆனால் எத்தனை பேருக்கு இது சொல்லப்பட்டிருக்கிறது?புரட்ட புரட்ட இளைஞர்கள் சிந்திய குருதியின் வாடை வீசும் பக்கங்களும்,அத்தியாயங்களும் நிரம்பியது இந்திய விடுதலையின் வரலாறு. ஆனால் கத்தியின்றி,ரத்தமின்றி,யுத்தமின்றிச் சுதந்திரம் வாங்கப் பட்டதாக மக்களின் மூளைகளில் திணிக்கப் பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பங்கையோ,மகாத்மா காந்தியின் மகத்தான தலைமையையோ மறுதலிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. எனினும் நேர்மையுடன் விடுதலைப்போரில் தங்கள் உயிரை துட்சமென நினைத்து,விடுதலையின் பறைமுழக்கத்தை இடைவிடாது அடித்து எழுப்பிக் கொண்டிருந்த புரட்சி இளையர்களின் பங்கையும் நினைவுபடுத்துவதே இதன் நோக்கம்.

ஊழலில் ஊறிப் பருத்த பெருச்சாளியான ராபர்ட் கிளைவ் என்னும் கொடூரன் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரியாக இந்தியாவுக்கு வந்து பெரும் அழிவை துவக்கி வைத்தான் 1757ல் நடைப் பெற்ற பிளாசிப் போரில் எண்ணற்ற இந்திய இளையர்கள் களப்பலி ஆனார்கள்,கிளைவ் வென்றான்,வங்காளத்தில் வரிவசூலிக்கும் உரிமை பெற்றான். இதே காலகட்டத்தில் தமிழ் மண்ணில் பூலித்தேவனும் அவனுடைய ஒற்றன் ஒண்டிப்பகடையும் ஆங்கிலேயருக்குப் பெரும் சேதாரத்தை ஏற்படுத்திப் படை நடத்தினர்.
யாரை கேட்கிறாய் வரி ? என்று வாளேடுத்துப் போர்புரிந்து 1799 அக்டோபர் 16ல் கயத்தாற்றில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டான் வீரபாண்டிய கட்டபொம்மன். சுந்தரலிங்கமும்,வெள்ளையத்தேவனும்,மகமது சாமியும்,கொட்டிப்பகடையும், முத்தனபகடையும் களப்பலி ஆகினார்.வெள்ளையத்தேவனின் இளம் மனைவி வெள்ளையம்மாள் பரங்கியின் பாசறைக்குள் ஆண்வேடம் பூண்டு உட்புகுந்து கணவனைக் கொன்ற பரங்கியனைக் குத்திச் சாய்த்துப் பழித்தீர்த்த தமிழச்சியாவாள்.
கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை,மருது சகோதரர்களுடன் கூட்டணி அமைத்து வெள்ளையர்களை எதிர்த்தான் 1801ல் இவர்களும் கொல்லப்பட்டனர்.பாம்பன் பாலம் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கவரி விதித்த ராமாநாதபுரத்து மன்னர் இளைஞர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி 1772ல் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சமகாலத்தில் வாழ்ந்த ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தான் மைசூர் பகுதியில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். பொருளாதார ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் வெள்ளையனுக்கு சவாலாக விளங்கிய இவர் 1799ல் போர்களத்தில் மாண்டார்.
1808-1810 வேலுதம்பி தலைமையில் நடந்த திருவாங்கூர் எழுச்சி,1830-1861 வங்கத்தின் வகாபியர் எழுச்சி,1849ல் நடந்த நாகர்களின் எழுச்சி,1853ல் நாதிர்கான் தலைமையில் ராவல்பிண்டியில் நடந்த கலகம்,1855-1856ல் சந்தால் பழங்குடி மக்கள் போராட்டம் என ஏராளமான போராட்டங்கள் வட்டார அளவில் மட்டுமே நடந்தது.பெரிய நிலப்பரப்பு முழுவதற்கும் பரவிய புரட்சி 1857ல் சிப்பாய்கலகம். வெள்ளைகார எஜமானியனுக்காக தம் நாட்டு மக்களையே கொலை செய்யும் நிலை,பசுக்கொழுப்பும்,பன்றிக்கொலுப்பும் தடவிய தோட்டாவை பயன்படுத்த கட்டாயப் படுத்தியது போன்ற காரணத்தால் சிப்பாய்கலகம் வெடித்தது.பிளாசிப்போரின் நூற்றாண்டு தினமான 31.5.1857ல் கலகத்தை துவங்க திட்டமிட்டது.எனினும் அதற்கு முன்னரே 10.5.1857ல் மீரட்டில் கலகம் துவங்கியது.டெல்லி கோட்டை சிப்பாய்களுடம் மீரட் சிப்பாய்களும் இணைந்து போரிட்டு ஏராளமான வெள்ளையர்களை கொன்று குவித்து 2ல் பகதூர்ஷாவை ஆட்சியில் அமர்த்தினர்.வடபகுதி முழுவதும் புரட்சி பரவியது.கான்பூரில் நானாசாகிப்,தாந்தியா தோப்பே,ஜான்சியில் இளம் ராணி லட்சுமிபாய்,லக்னோவில் அகமதுல்லாஷா என இளம்புயல்கள் இவ்வெழுச்சிகளுக்குத் தலைமைதாங்கியது.

எனினும் தெற்கிலும்,வடகிழக்கிழும்,மேற்கிலும் கிளர்ச்சி பரவாதது ஆங்கிலேயருக்கு சாதகமாக அமைந்தது,நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வெள்ளையர் படைகள் அழைக்கப் பட்டு இச்சிப்பாய்கலகப் புரட்சி 1857 செப்டம்பர் 19ல் ஒடுக்கப்பட்டது.அடுத்த கட்ட இந்திய விடுதலைக்காக நடந்த இளைஞர் எழுச்சி பேரலையை மூன்றாக வகைப்படுத்தலாம்.
முதல் பேரலை 1897 - 1910 :
உறக்கத்திலிருந்த இந்திய மக்களைத் தட்டியெழுப்பிய முதல் வெடிச்சத்தம் 1897 ஜூன் 22ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் கேட்டது.புனேயில் பிளேக் நோய் பரவியதைத் தொடர்ந்து கிருமிகளை ஒழிப்பது என்ற பேரில் சொத்துக்களை எரித்தும்,மக்களை முகாம்களுக்குத் தள்ளியும்,பெண்கள் மீது வன்முறை செலுத்தியும் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டது.அதற்குச் சரியான எதிர்வினையாக இளைஞர்கள் சாப்கர் சகோதரர்கள் பிரிட்டிஷ் பிளேக் கமிஷனரான ராண்ட் என்பவரையும் இன்னொரு அதிகாரியையும் போட்டு தள்ளினர். சாப்கர் சகோதரர்களின் கைதும்,1898ல் அவர்கள் தூக்கிலிடபட்டதும் மக்களிடையே பெறும் அனுதாபத்தையும் சுதந்திர தியாகத்தையும் ஏற்படுத்தியது.இச்சம்பவத்தால் வி.டி.சவார்க்கர் தலைமையில் இயங்கிய மித்ர மேளா எனுன் இளைஞர் அமைப்பு பெறும் உந்துதல் பெற்றது,பின்1904ல் நாசிக்கில் இவ்வியக்கம் அபிநவபாரத் எனும் பெயர் மாற்றம் கண்டது. இதே காலகட்டத்தில் சதிஷ் போஸ்,ஜதேந்திர பேனர்ஜி என்பவர்கள் வங்கத்தில் கல்கத்தா அனுஷிலான் சமிதி என்ற இளையர் அமைப்பை உருவாக்கினர்.1905ல் வெள்ளையன் கர்சன் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தான்,முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதி கிழக்கு வங்காளம் என்றும்,இந்துக்கள் உள்ள பகுதி மேற்குவங்காளம் என்றும் பிரித்து மக்களின் ஒற்றுமையை குலைக்க முயர்ச்சித்தான்.இக்காரியம் மகத்தான மக்கள் எழுச்சிக்கும்,ஒன்றுபட்ட போரட்டங்களுக்கும் வித்திட்டது.இதன் தொடர்நிகழ்வாக 1905ல் கல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியின் முடிவில் அந்நிய பொருட்களை பகிஷ்கரிக்க முடிவு செய்யபட்டது.

இச்சமயத்தில் தமிழ்நாட்டின் தென் கோடியில் ஒரு பிராகசமான நட்சத்திரம் சுடர்விட்டு பிராகாசித்தது.33வயது இளையரான வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசிப் புயலாகத் தமிழகத்தில் சுழன்று வந்தார்.1906ல் சுதேசிக்கப்பல் விட்டார்.1908இல் ஆங்கிலேயருக்கு சொந்தமான கோரல் ஆலைத்தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் இறக்கி,அப்போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.அதே ஆண்டு அவர் கைது செய்ய பட்டார்.இக்கைது நடவடிக்கையால் மாணவர்களும்,பொதுமக்களும் தெருவில் இறங்கி போராடினர்.
இரண்டாம் பேரலை 1911 - 1919 :
வாஞ்சி அய்யர் என்ற 20 வயது வாலிபர் 1911ல் நெல்லை சீமையிலே மணியாச்சி ரயில் நிலையத்தில் கலெக்டர் ஆஷ் என்பவனைத் துப்பாக்கியால் சுட்டு இளைஞர் எழுச்சியின் இரண்டாவது பேரலையை துவக்கி வைத்தார். கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் பிழைக்கப் போன இந்தியர்கள் சான் பிரான்சிஸ்கோவை மையமாக வைத்து 1913ல் கத்தர்(புரட்சி)இயக்கத்தை துவங்கினர்.சோகன் சிங் ப்க்னா அதன் தலைமைப் பொறுப்பேற்றார்.இந்தியாவில் ராஷ்யபிகாரிபோஸ் முன்முயற்சியில் நாடு தழுவிய ஒரு எழுச்சிக்கு திட்டம் போடப்பட்டது.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் குழுக்களை ஒருங்கினைத்தும்,வெளிநாடுகளிலிருந்து அமைப்புகளின் உதவியோடும் திட்டம் தீட்டப்பட்டது.இந்திய ராணுவ படையில் பிளவுண்டாக்கி எழுச்சியைத் துவக்க முடிவு செய்யப்பட்டது.பிரிட்டனின் எதிரி நாடான ஜெர்மனி மற்றும் துருக்கியுடன் பேசி ஆயுதங்கள் பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அவர்களும் ஆயுதங்கள் தர சம்மதம் தெரிவித்தனர்.கத்தர் இயக்க வீரர்கள் பஞ்சாபிற்குள் வந்து குவிய தொடங்கினர்.பல இடங்களில் அவர்கள் பிரிட்டிஷாரால் பிடிபட்டாலும் சுமார் 8000 பேர் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டனர்.ஆங்காங்கே ராணுவபடைப் பிரிவுடன் ரகசியமாக பேசதுவங்கினர்.ராஷ்யபிகாரி போஸ்,பிங்ளே,சச்சிந்திரநாத் போன்ற தலைவகள் ஆயுதங்கள் தயாரிக்கவும்,படைகளைதிரட்டவும் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்தனர்.
21-2-1915 அன்று ஒரே நேரத்தில் எழுச்சி தொடங்க திட்டமிடபட்டது,தலைவர்கள் ஒவ்வொரு இடத்திலும் நின்று நேரடி தலைமையாக வழிநடத்தினர்.எல்லாம் சரியாகத்
துவங்கியது,ஆனால் வெளிநாட்டில் இருந்து ஆயுதங்கள் கடைசி வரை வந்து சேரவில்லை.சிலபடைப்பிரிவுகளில் காட்டிக் கொடுக்கும் பணியும் நடந்ததால் அதே ஆண்டில் இவ்வெழுச்சி அன்னியர்களால் அடக்கப்பட்டது.பிங்ளே,கர்த்தார் சிங் உள்ளிட்ட 46பேர் ஒரே நேரத்தில் தூக்கிலடப்பட்டனர்,பலர் நாடு கடத்த பட்டனர்,சிறையிலடைக்கப்பட்டனர்.ஜதீந்திரநாத்தும் ஆயுத மோதலில் வெள்ளையர்களால் கொல்லப் பட்டார்.1919ல் நடந்த ஜாலியின்வாலாபாக் நிகழ்ச்சி மக்களிடம் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.எனினும் பிரிட்டிஷ் படையால் இரண்டாம் பேரலையும் அடக்கப்பட்டது.
மூன்றாம் பேரலை 1920 - 1945 :
இக்கால பகுதியின் முக்கியமான இயக்கங்களாக சந்திரசேகர் ஆசாத்தின் இந்துஸ்தான் குடியரசு ராணுவம்,பகத்சிங்கின் இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவம் மற்றும் சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவம்(INA) ஆகியவையாகும்,வங்கத்தின் இளைஞசர்களைக் கொண்டு1923ல் துவக்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசு ராணுவம் காசி,அலகாபாத்,லக்னோ,கான்பூர்,ஆக்ராவிலும் பரவி விடுதலையை நோக்கி முன்னேறியது.எனினும் 1926 இறுதிக்குள் இவ்வியக்கத்தின் முக்கியத்தலைவர்கள் (சந்திரசேகர் ஆசாத்தை தவிர) கைதானார்கள்,நீண்ட விசாரனை நடந்தது.ஒவ்வொரு நாள் விசாரனையையும் அவர்கள் விடுதலை வேட்கையை விதைக்கும் பிரச்சார மேடையாக பயன்படுத்தினர்.பின்னர் பலரும் தூக்கிலடப்பட்டனர்.
இதில் தப்பிய சந்திரசேகர் ஆசாத் கூடுதல் சக்தி வாய்ந்த இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவத்தத உருவாக்கினர்.பகத்சிங் பின்னர் இதில் இணைந்து கொண்டார்.
இவ்வியக்கத்தின் மிகப்பெரிய நடவடிக்கை “சாண்டர்ஸ்” கொலையாகும்,1928ல் சைமன் கமிஷனுக்கு எதிராக பஞ்சாபில் லாலா லஜபதிராய் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தை போலிஸ் வெறிகொண்டு தாக்கினர். இத்தாக்குதலில் லாலா லஜபதிராய்
நெஞ்சில் தாக்கப்பட்டு வீழ்ந்தார்,பின் இதனால் படுக்கையில் வீழ்ந்து மரணமடைந்தார்.இந்நிகழ்வில் கொதித்தெழுந்த பகத்சிங் சக தோழர்களான சந்திரசேகர் ஆசாத்,சுகதேவ்,ராஜகுருவின் உதவியோடு போலிஸ் அதிகாரி சாண்டர்ஸை சுட்டுகொன்றனர்.இந்த ஒரே நடவடிக்கையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றனர் இவ்விளைஞர்கள்.பின்னர் பகத்சிங்கும் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டார்.அலகாபாத்தில் போலிசுடன் நடந்த மோதலில் சந்திரசேகர் ஆசாத்தும் கொல்லப்பட்டார்.காங்கிரஸில் இருந்து பிரிந்து சுபாஸ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.ஜெர்மனி,சிங்கப்பூர்,ஜப்பான் போன்ற நாடுகளின் உதவியோடு 1944ல் பர்மாவில் வெள்ளையர்களை எதிர்த்து இந்திய தேசிய ராணுவம் போரிட்டது.எனினும் வெள்ளையரால் அது முடக்கப்பட்டது.1945ல் ஜப்பானில் விமான விபத்தில் அவர் இறந்ததாக நம்பப்படுகிறது.ஆனால் உண்மை???????

இன்னும் எத்தனை எத்தனையோ இளைஞர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.பலரது வீரர்களின் பெயர்கள் இக்கட்டுரையில் விடுபட்டிருக்கலாம்,ஆக வீரமிக்க இளைஞர்களின் ஒட்டுமொத்த நெருக்குதலாலும்,மகாத்மா அவர்களின் மகத்தான தலைமையிலும் 1947ல் நமக்கு சுதந்திரம் கிடைத்தது.

வெள்ளையர்களிடம் கிடைத்த சுதந்திரம் இன்று சுயநல அரசியல்வாதிகளிடம் சிக்கியுள்ளது.அவற்றை மறுபடியும் பெற மற்றுமொரு சுதந்திரப் போராட்டம் அவசியமாகிறது.சமூக அரசியல் மாற்றித்திற்கான இச்சுதந்திர பயணத்தில் நமது “மக்கள் சக்தி இயக்கம்” பயணிக்கிறது.சக பயணிகளாக மாணவர்களும் இளைஞர்களும் ,சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வருவார்கள் எனும் நம்பிக்கையில்.ஆம் நண்பர்களே சமூக அக்கரையுள்ள மக்கள், வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல்,இந்த இரண்டாவது சுதந்திர போராட்டத்தில் பங்குபெறும் பங்கேற்பாளராகவும் இருக்கவேண்டும்...

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்
ஜெய் ஹிந்த்

மக்கள் சக்தி இயக்கம்
http://www.makkalsakthi.org/
நன்றி : திரு.ச.தமிழ்ச்செல்வன் பாரதி புத்தகாவியம்

Tuesday, July 8, 2008

இயக்கத்தில் இன்று...

சமூக, அரசியல் மாற்றத்தை நோக்கிய நமது மக்கள் சக்தி இயக்கத்தின் சீரியபயணம், அதன் இலக்கை நோக்கி சிறந்தவகையில் நகர்ந்து வருகிறது. வெளிப்படையான அரசுதுறை நிர்வாகத்தை வலியுறுத்தும் நமது இயக்கம்,தனது நிர்வாகத்தையும்,அதன் செயல்பாடுகளையும் வெளிப்படையாகவே இயக்கி வருகிறது. அதன் வெளிப்பாடே “இயக்கத்தில் இன்று” என்ற அங்கம்.பல்வேறு பகுதிகளில் நமது இயக்கத் தோழர்கள், “மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தும், மக்களை அதிகாரப்படுத்தும் தங்களது களப்பணிகளை செய்து வருகிறார்கள்.அக்களபணிகளையும், இயக்கத்தின் செயல்பாடுகளையும் தொகுக்கும் நாட்குறிப்பேடு தான் “இயக்கத்தில் இன்று”.

அதுமட்டுமல்லாமல், உடலால் பல்வேறு இடங்களிலும்,பல்வேறு நாடுகளிலும் பிரிந்திருக்கும் மக்கள் சக்தியின் ஒத்த உணர்வுள்ள உள்ளங்களை இணைக்கவும் “இயக்கத்தில் இன்று” அங்கம் உதுவும்...

ஜூலை-16 புதன் கிழமை- 2008 (16/07/2008):

அணுசக்தி உடன்பாடு,நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற தலைப்பில் “விண்” தொலைகாட்சியில் ‘நீதியின் குரல்” அங்கம் இடம்பெற்றது, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட இந்த அங்கத்தில், நமது இயக்க தோழரும் கலந்து கொண்டு தனது கருத்தை எடுத்துரைத்தார்.

சென்னையில், மருத்துவர்.ராமதாஸ் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் அவரை சந்தித்து இந்த மாத நமது “நம்மால் முடியும்” இதழை நேரடியாக அவரிடம் இயக்க நண்பர்கள் கொடுத்தனர்.

சென்னை அண்ணாநகரில் திரு.பிரகாஷ் காரட் அவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இயக்க நண்பர்களும் கலந்து கொண்டு அணுசக்தி உடன்பாடு தொடர்பான அவர்து கருத்தை கேட்டறிந்தனர்

ஜூலை-15 செவ்வாய்க் கிழமை- 2008 (15/07/2008):

பிரபல எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் அவர்களை பற்றிய ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் திரு.ரவிசுப்ரமணியன் அவர்களுடனான கலந்துரையாடல் சென்னை அடையாரில் நடந்தது.நமது மக்கள் சக்தி இயக்கத்தின் உறுப்பினர்களும்,5வது தூண் அமைப்பின் இந்திய தலைவர் திரு.விஜய்ஆனந்த் அவர்களும் இதில் பங்கேற்றார்.சம கால சமூகநிகழ்வு.அரசியல் மாற்றம் குறித்தும் விவாதிக்கப் பட்டது.

காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் “உலகமயமாக்கலும்,உள்ளாட்சி அமைப்புகளும்” என்ற கருத்தரங்கத்தின் முதல் நாள் கூட்டம் சிறப்பாக நடந்தது.நமது இயக்கதோழரும் இதில் பங்கேற்று, உலகமயமாக்கல்,உள்ளாட்சி அமைப்புகளை குறித்த மக்கள் சக்தி இயக்கத்தின் பார்வையை பதியவைத்தார்.

ஜூலை 14 - திங்கள் கிழமை- 2008 (14/07/2008):

“உலகமயமாக்கலும்,உள்ளாட்சி அமைப்புகளும்” என்ற தலைப்பில் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் ஜூலை 15,16 தேதிகளில் கருத்தரங்கம் ஒன்று நடக்க உள்ளது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட பஞ்சாயத்தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.நமது இயக்கத்தை சார்ந்த தோழர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.

ஜூலை 12 - சனிக் கிழமை - 2008 (12/07/2008):

கிராம வளர்ச்சியை மையப்படுத்தி கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சிறந்த பத்திரிக்கையாளரான திரு.சசிநாத் அவர்களுடன், விவசாயம் குறித்து ஒர் கலந்துரையாடல் நிகழ்வு சென்னையில் இன்று நடந்தது, மக்கள் சக்தி இயக்கமும் அந்நிகழ்வில் பங்கேற்றது.

தகவல் அறியும் உரிமைசட்டம் தொடர்பாக நமது இயக்கம் கையேட்டு புத்தகத்தை வெளியீட உள்ளது,அதுசார்ந்த பணிகளும் இன்று நடந்தன,

ஜூலை 11 - வெள்ளிக் கிழமை - 2008 (11/07/2008):

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்துள்ள 5வது தூண் அமைப்பின் இந்திய தலைவர் திரு விஜய் ஆனந்த் அவர்களுடன்,நமது மக்கள் சக்தி இயக்கத்தின் உறுப்பினர்கள் இன்று சந்தித்து கலந்துறையாடினர். 5வது தூண் அமைப்பின் செயல்பாடுகளைக் குறித்தும்,மக்களை அதிகாரப்படுத்தும், மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தும் நமது இயக்கத்தின் களப்பணிகள் குறித்தும் பகிர்ந்துக் கொள்ளப்பட்டது.

ஜூலை 10 - வியாழக் கிழமை - 2008 (10/07/2008):

கன்னியாகுமரியில் நடக்கவிருக்கும் பஞ்சாயத்து கூட்டங்களில் பங்குபெற நமது மக்கள் சக்தியின் உறுப்பினர் அங்கு முகாமிட்டுள்ளார். மக்களை அதிகாரப்படுத்தும்,மக்களே திட்டமிடும் வளர்ச்சிதிட்டங்களைக் குறித்து அக்கூட்டத்தில் இயக்க தோழர் விளக்கவும் உள்ளார்.

பத்திரிக்கையில் இடம்பெறும் விளம்பரம் தொடர்பான அலுவலகப் பணியில் சென்னை இயக்க தோழர்கள் ஈடுபட்டனர்.

ஜூலை 09 - புதன் கிழமை - 2008 (09/07/2008):


விருதுநகர் மாவட்டம் : நதிக்குடி பஞ்சாயத்தில் இன்று நடந்த மாதாந்திரக் கூட்டத்தில் மக்கள் சக்தி இயக்கமும் பங்கேற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினர்களுக்கு , மக்களே விவாதித்து,மக்களே திட்டமிடும் வளர்ச்சிதிட்டத்தை(காந்திகிராம் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பபட்டுள்ள திட்டம்)குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

சென்னை மாவட்டம் : தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக இன்று இயக்கத்திற்கு வந்த 20க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கு தகுந்த விவரமும்,விளக்கமும் கொடுக்கப்பட்டது. அடுத்த மாதத்திற்கான இதழைக் குறித்தும்,இதழில் இடம்பெறும் விளம்பரம் குறித்தும் இயக்கத் தோழர்களின் கூட்டம் மாலையில் நடந்தது.

கோவை மாவட்டம் : கோவையில் உள்ள பஞ்சாயத்துக்களுடன் அடுத்த சனிக்கிழமை(ஜூலை 19 ) நடைபெறும் மதுஒழிப்பு ஆர்வலர்கள் கூட்டம்கோவையில் உள்ள பஞ்சாயத்துக்களுடன் அடுத்த சனிக்கிழமை(ஜூலை 19 ) நடைபெறும் மதுஒழிப்பு ஆர்வலர்கள் கூட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு விடுதியில் மதியம் 2.30க்கு கூட்டம் நடக்கும் என இன்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக அழைப்பிதழ் அடிக்கும் பணியும் இன்று துவங்கியது

ஜூலை 08 - செவ்வாய் கிழமை - 2008 (08/07/2008):

விருதுநகர் மாவட்டம் : கிராம மக்களின் சமூக,பொருளாதார மேம்பாட்டை மத்திய,மாநில அரசுகளால் கொண்டுவர முடியவில்லை.அடித்தளத்தில் உள்ள பஞ்சாயத்துக்களால் அம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். தங்கள் தேவைகளை கள ஆய்வுசெய்து, அவர்களே திட்டமாகத் தயாரிக்கும் பணியினை நமது இயக்கம் பஞ்சாயத்துடன் இணைந்து செயல்படுத்திவருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை ஒன்றியத்தில் உள்ள நதிக்குடி ஊராட்சியில் கடந்த மாதம் கள ஆய்வை மேற்கொண்டது,பின் அவை திட்டமாக தீட்டப்பட்டது.முழுமையாக தீட்டிய நதிக்குடி ஊராட்சியின் திட்டம் இன்று காந்திகிராம் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பபட்டுள்ளது.

கோவை மாவட்டம் : ஜூலை 19ல் கோவையில் மதுஒழிப்பு ஆர்வலர்கள் கூட்டம் நடக்க உள்ளது,கூட்டம் சம்மந்தமான களப்பணிகளை இயக்கதோழர்கள் செய்து வருகின்றனர்.

சென்னை மாவட்டம் : ஜூலை மாதத்திற்கான “நம்மால் முடியும்” இதழை தாபால் மூலம் அனுப்பும் பணி நடைப்பெற்று வருகிறது. அடுத்த மாதத்திற்கான நமது இதழின் நேர்காணலில் திரு.தொல்.திருமாவளவன் அவர்களை இடம்பெறசெய்ய,இயக்க தோழர்கள் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைமையகத்தை இன்று அனுகியுள்ளனர்.

Friday, July 4, 2008

"நம்மால் முடியும்" மாத இதழ் -ஜூலை08

“நம்மால் முடியும் ஜூலை-08 மாத இதழ்” -முக்கிய செய்திகள்...
மருத்துவர்.ராமதாஸ் அவர்களுடன் நேர்காணல்...
  • காரத்துக்கும்,பரதனுக்கும் ஏன்புரியவில்லை?....
  • சூடானவிவாதங்கள், தீர்வைநோக்கிய பயணங்கள்...
  • மேலும் படிக்க...

    Monday, June 30, 2008

    ஊடகங்களில் இயக்க செய்திகள்(In the Media)


    ஊடகங்களே செய்திகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டுச் செல்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது நமது “மக்கள் சக்தி இயக்கத்தை”குறித்தும், அதன் களப்பணிகளைக் குறித்தும் ஊடங்களில் வெளியாகியுள்ள செய்திகள், நிழற்படங்கள் மற்றும் ஒளிக்காட்சிகள்(Video clip)...

    Tuesday, April 1, 2008

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வெற்றிக் கதை

    நம்பு தம்பி நம்மால் முடியும், ஆம் நண்பர்களே அதுப்போல நம்பி தான் தனது உரிமையை வாங்கியுள்ளார் நண்பர் திரு.சுப்ரமணியன்.தனக்கு கிடைக்காத எரிவாயு கலன்களுக்காக (Gas cylinder) தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனுகினார்,அதற்கு நமது மக்கள் சக்தி இயக்கத்தின் "நம்பு தம்பி நம்மால் முடியும்" இதழ் காரணமாக அமைந்திருப்பது மகிழ்ச்சியே,



    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தனது மனுவில் 9 கேள்விகளை முன்வைத்தார் திரு.சுப்ரமணியன்,அதற்கு அவருக்கு பதிலும் கிடைத்தது கூடவே தனுக்கு கிடைக்கவேண்டிய உரிமையும்.ஆனால் அவர் கேட்ட மற்ற கேள்விகளுக்கு விடை அளிக்கபடவில்லை. அவருக்கு உரிமைக் கிடைத்தச் செய்தியை நமது இக்கத்திற்கு கடிதம் வழி தெரிவித்து தனது நன்றியையும் பதிவுசெய்ததார்.
    வாழ்த்துகள் நண்பரே!!!

    அவர் நமக்கு எழுதிய கடிதம்,தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அனுப்பிய மனு மற்றும் அதற்கு தகவல் ஆணையம் அளித்த பதில் போன்றவை கீழே உங்களின் பார்வைக்கு.



    தொடரட்டும் வெற்றிக் கதைகள்


    நமது இயக்கத்தின் வெற்றியும் அதுவே!!!




    நமக்கு எழுதிய கடிதம்




    தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அனுப்பிய மனு


    தகவல் ஆணையம் அளித்த பதில்




    மக்கள் சக்தி இயக்கம்
    நம்மால் முடியும் மாத இதழ்

    Saturday, March 22, 2008

    சர்வதேச தண்ணீர் நாள் (22/3/2008)

    நீர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு
    - திருக்குறள்

    இன்று தண்ணீர் நாள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப் படுகிறது, ஐ.நா.வின் பொருளியல் மற்றும் சமூக குழுமத்தின் ஆய்வின்படி உலகில் 70% மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்கிறது.ஆண்டுதோரும் 5மில்லியன் மக்கள் மாசுபட்ட குடிநீரால் ஏற்படும் நோயின் மூலம் இறந்து விடுகின்றனர்,இது போரில் இறப்பவர்களை விட 10 மடங்கு அதிகம்,பெறும்பாலும் நிலத்தடிநீரை நம்பி இருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களில் ஆண்டுக்கு 4மீட்டர் அளவுக்கு நிலத்தடிநீர் குறைந்துகொண்டு வருகிறது.75000 கிராமமக்களின் நீராதாரமாக விளங்கிய “வைத்தார்னா” ஏரியை கோக்கோ கோலா நிறுவனம் விலை கொடுத்து வாங்கிவிட்டது.இதுபோன்று நீர் ஆதாரங்கள் தனியார்மயமாகும் போக்கும் அங்கங்கே அரங்கேற்றப்படுகிறது.

    2025ல் இருக்கும் பெறும் பிரச்சனை குடிநீர் பிரச்சனை தான் என்றும் ஐ.நா அறிவித்துள்ளது.தினசரி செய்திகளில் “இன்றய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ற செய்தியோடு இன்றய “தண்ணீர் விலை நிலவரம்” எனும் செய்திவந்தாலும் ஆச்சிரியமில்லை.


    தண்ணீரை சேமிப்போம்

    தமிழக அரசின் 2008-09 ஆண்டிற்கான பட்ஜெட்டில், மாநில முக்கிய நதிகள் இணைக்கப்படும் எனும் அறிவிப்பு பாராட்டுக்குரியது,தமிழகம் போன்ற மாநிலங்களின் தண்ணீர் பற்றாக்குறைக்கும் நதிநீர் பங்கீட்டு பிரச்சனைக்கும் ஒரேத் தீர்வு தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் தான்.நமது மக்கள் சக்தி இயக்க நிறுவுனர் அய்யா திரு.எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் நடைபயணம் மேற்கொண்டதும் இதற்காகத்தான். ஆனால் இத்திட்டம் நிறைவேற்ற ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில்,தமிழக அரசின் மாநில நதிகள் இணைக்கப்படும், திட்டம் ஒரு முன்னோடியாக அமையும்.மத்திய அரசும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளது.



    நன்றி : தினமலர்


    வெள்ளக் காலங்களில் காவேரி ஆற்றில் பெருகும் உபரி நீரை,வறண்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்காக காவேரி - அக்னியாறு - கோரையாறு - பாம்பாறு, - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டமாக காவேரி ஆற்றின் குறுக்கே கட்டளை பகுதியில் தடுப்பணை கட்டும் திட்டம் 165கோடி செலவில் செயல்படுத்தபடும் என அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

    ஆனால் இத்திட்டம் வெறும் கோப்புகளில் எழுதப்பட்டு “கானல் நீராகாமல்” தமிழகமெங்கும் “கானும் நீராகினால்” மகிழ்ச்சியே.

    நம்மால் முடிந்த வரை தண்ணீரை வீணாக்கமலும் விரையமாக்காமலும் பயன்ப்படுத்த சர்வதேச தண்ணீர் நாளான இன்று உறுதிகொள்வோம்.

    “யாருக்கு தண்ணீர் சொந்தம் என்பது”,
    “தாகம் எடுப்பவனுக்கு மட்டும் தான்”, என்ற நிலை வரும்......


    மக்கள் சக்தி இயக்கம்
    நம்மால் முடியும் மாத இதழ்

    Monday, March 17, 2008

    தரமணியில் தரைமட்டமாக்கப் பட்ட நீதி

    திங்கள் கிழமை (17/03/2008) மாலை நமது மக்கள் சக்தி இயக்கத்திற்கு வந்த அவசர அழைப்பை ஏற்று தரமணியை அனுகினோம்.அங்கு கமலநாதன் என்பவரது வீடு இடிக்கப்பட்டு அலங்கோல நிலையில் இருந்தது. மேலும் விசாரிக்கையில் நமக்கு கிடைத்த தகவல்கள்....

    சென்னை தரமணியில் கமலநாதன் 1993 முதல் வசித்து வருகிறார்.(1200 சதுர அடி).குடிசை மாற்று வாரியமும் 1997ல் அவருக்கே அந்த இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.அதற்கான தொகையையும் 1995-1996ல் அவர் வாரியத்திடம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் அங்கு வசிக்காத திரு.லலிதா கதிர்வேலுக்கும் அந்த இடம் (600 சதுர அடி)ஒதுக்கபட்டுள்ளதாக அறிந்த கமலநாதன்,குடிசைமாற்று வாரியத்தின் மீது வழக்கு தொடர்ந்தார்,இதை தொடர்ந்து குடிசை மாற்று வாரியம் திரு.லலிதா கதிர்வேலுக்கு ஒதுக்கீடு செயத்தை ரத்து செய்த ஆனைப் பிறப்பித்தது.மேலும் அதே இடத்தில் வசித்து வரும் தனக்கே அவ்விடத்தை ஒதுக்கவேண்டும் என வலியுருத்தி வழக்கும் தொடுத்துள்ளார் கமலநாதன்.இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிழுவையில் உள்ளது.

    குடிசை மாற்று வாரிய இடத்தை வாங்குவதும் விற்பதும் சட்டப்படிக் குற்றம் அப்படி இருந்தும் நிலத்தில் எந்த வித உரிமையும் இல்லாத திரு.லலிதா கதிர்வேலு அந்த இடத்தை விஷ்னு என்பவருக்கு விற்று விட்டார்,தற்போது அதை காங்கிரஸ் பிரமுகர் தரமணி எஸ்.சார்லஸ் அவர்கள் வாங்கி,15/03/2008 அன்று காலை கமலநாதனின் வீட்டிற்கே சென்று தான் இந்த நிலத்தை வாங்கிவிட்டதாகவும் உடனடியாக இவ்விடத்தை காலி செய்யும் படி மிரட்டியுள்ளார்.இதனால் கமலநாதன் தரமணி J.7 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார், இதை விசாரித்த உதவி ஆய்வாளர் 17/03/2008 திங்கள்கிழமை காலை காவல் ஆய்வாளர் முன்னிலையில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று அனுப்பிவைத்துள்ளார். ஆனால் கதர்சட்டை காங்கிரஸ்காரர் சார்லஸ் தனது 15 ஆட்களுடன் மதியம்(15/03/2008) கமலநாதன் இடத்தை ஆக்கிரமித்து அங்கு உள்ள வாழை போன்றவற்றை வெட்டிசாய்த்து, மதில் சுவர் கட்ட ஆரம்பித்தனர்,தடுக்க முயன்றும் பயணில்லை,அஹிம்சையை மறந்து காங்கிரஸ்காரர் சார்லஸ் தொடர்ந்து அங்குள்ள குளியளரையை இடித்து ஒரு கொட்டகையும் அமைத்தார்.ஆனால் மீண்டும் அஹிம்சை வழியில் உரிமைக்காக காவல் துறையிடம் முறையிட விறைந்தார் கமலநாதன்.

    காவல் நிலையத்தில் உள்ள ஏட்டு சக்திவேலை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்,ஏட்டு சக்திவேல் மதில் சுவர் கட்டுமானத்தை நிறுத்தி காவல் நிலையத்திற்கு வருமாறு சார்லஸிடம் கூறி சென்றுவிட்டார். கமலநாதனும் தன் மனைவியுடன் காவல் நிலையம் சென்றனர்.இச்சமயத்தில் வீட்டில் இருந்த கமலநாதனின் பதின்மவயது பெண்களை சார்லஸின் ஆட்கள் அரிவாள் கொண்டு மிரட்டியுள்ளனர்.

    இந்நிலையில் திங்கள் கிழமை (17/03/2008) அன்று காலை பேச்சுவார்த்தைக்கு காவல் நிலையம் வந்தார், ஆனையர் இல்லாததால் மாலை வரும்படி அனுப்பிவைக்கப் பட்டார்.ஆனால் அவர் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அன்று மாலை அவரது வீடு முற்றிலுமாக இடிக்கப்பட்டது,15/3/2008 புகார் கொடுத்த அன்றே துரிதமாக நடவடிக்கையை காவல் துறை எடுத்திருந்தால் கமலநாதனின் வீடு காக்கப் பட்டிருக்கும்.ஆனால் அவரது உடமைகள் தெருவில் வீசிஎறியப்பட்டன.தான் வசித்த தெருவில் தன் மனைவி மகளுடன் அகதியாக்கபட்டார் கமலநாதன்.கதர்சட்டைக்குத் தான் அகதிகள் கிள்ளுகீரையாயிற்றே.ஆனால் காவல் துறையும் கைகட்டி நின்றதுதான் வேதனையின் உச்சகட்டம்.

    தான் வசித்த வீட்டிற்காக பதின்மவயது இரு பெண்கள் மற்றும் மனைவியுடன் போராடிக்கொண்டிருக்கும் கமலநாதனின் விடியளை எந்த "கை"கொண்ட காங்கிரஸ் காரரும் தடுக்க இயலாது. மக்களின் காவலன் காவல் துறை இதை பரிீசீலிக்குமா???

    மக்கள் சக்தி இயக்கம்

    "நம்பு தம்பி நம்மால் முடியும்" மாத இதழ்.





    வீடு இடிக்கும் முன் எடுத்தப் படம் வீடு இடித்தப் பின் எடுத்தப் படம்






    மக்கள் சக்தி இயக்கம்
    "நம்பு தம்பி நம்மால் முடியும்" மாத இதழ்.

    Wednesday, March 12, 2008

    புத்தகப் பூங்கொத்துத் தொடக்க விழா ( 11-03-2008)


    கல்வியானது குழந்தைகளை மாகாத்மாவாக ஆக்க வேண்டியதில்லை மனிதனாக்கினால் போதும். எனும் வாசகத்தை வாசித்தவாறே, சென்னை காரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பூத்து மணம் வீசக் காத்துக்கொண்டிருந்த புத்தகப் பூங்கொத்து விழாவில் கலந்துகொண்டோம்.

    செயல்வழிக்கற்றல் முறை தமிழகத் தொடக்கப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு கூறாக நூலகத்தை வகுப்பறைக்கே, அதுவும் மாணவன் கையெட்டும் அளவிற்கு கொண்டுவருவதே இந்தப் புத்தகப் பூங்கொத்தின்(Reading corner) நோக்கம், தமிழகம் முழுவதிலும் உள்ள 37463 பள்ளிகளிலும், சுமார் 5கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் கல்வித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களால் 11/03/2008 அன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தேசிய புத்தக நிறுவனம்(National Book Trust) மற்றும் குழந்தைகள் புத்தக நிறுவனத்தின் மூலம் 172 தலைப்பில் குறிப்பாக, இயற்கை,விளையாட்டு, தலைவர்கள் போன்ற தலைப்பிலான புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது.இந்த “புத்தகப்பூங்கொத்து” திட்டத்தின் மூலம் சுமார் 65லட்சம் மாணவர்கள் பயனடைவர் என அமைச்சர் கூறினார்



    கட்சி மற்றும் கட்சித் தலைமை புகழ் பாடாமல் அமைந்த அமைச்சரின் பேச்சு நாம் எதிர்நோக்கும் நல்ல அரசியல்வாதிக்கான பண்புகளாகும். மேலும், அவரின் உரை முழுவதிலும் மாணவர்களையும் அவர்களின் கல்வியையும் ஒட்டியே அமைந்தது. புத்தகப்பூங்கொத்தை வெளியிட்ட அமைச்சருக்கு மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் நல்ல மணம் வீசும், மலர் பூங்கொத்துடன் வாழ்த்துகின்றோம்.



    நமது இயக்கத்தோழர் திரு.செந்தில் ஆறுமுகம் அவர்கள் அமைச்சரைச் சந்தித்து, நமது மார்ச்சு மாத இதழைக் கொடுத்து, பொம்மிக்குப்பத்தின் மேல்நிலைப்பள்ளி விண்ணப்பத்தையும் தெரிவித்தார். அதற்கு அமைச்சர் ஏப்ரல் மாதத்தில் இதைப் பற்றி நினைவுபடுத்தச் சொன்னார்.



    செயல் வழிக் கற்றல் முறைஎன்றால் என்னவென்று, இயங்கும் வகுப்பறைக்குச் சென்று, அது நடக்கும் முறையை அதை நடத்தும் ஆசிரியரிடமே கேட்டறிந்தோம், வகுப்புக்கள் முழுவதும் வண்ணமயமான அட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு, மாணவர்கள் சிந்திக்கும் வகையில் அட்டைகளாலாயே பாடங்கள் நடத்தப்படும். இந்த “செயல்வழிக் கற்றல்” தமிழகக் கல்வித்துறையில் ஒரு மைல்கல் தான். மாணவர்கள் பள்ளிக்கு வருகையில் எந்த புத்தகங்களும் எடுத்து வரவேண்டியதில்லை. கரும்பலகைகள் மாணவர்களின் உயரத்திற்கே வைத்து அவர்களே அதில் எழுத வழிவகை செய்கிறது. ஆசிரியர்களுக்கு இது சார்ந்து தனிப்பட்ட பயிற்சியும் பள்ளி, மற்றும் கல்வித்துறையால் வழங்கப்படுகிறது



    மாணவர்களின் வாசிப்பை வளர்க்கும் இந்த புத்தகப் பூங்கொத்து மேலும் வகுப்பறையை அலங்கரிக்கும் என்பதில் ஐயமில்லை எனினும் பெரும்பாலும் அனைத்து புத்தகங்களும் மொழிபெயர்ப்பு புத்தகங்களாகவே உள்ளது. இதனால் அதில் உச்சரிக்கும் வார்த்தைகள் சற்று சிரமமாக இருக்கிறது. எளிமையான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி நேரடித் தமிழ்ப்புத்தகங்கள் வகுப்பறைகளில் இடம்பெறவேண்டும். இப்பள்ளியை சுற்றிப் பார்க்கையில் சுகாதாரமற்ற கழிவறைகளையும் காணநேர்ந்தது.

    தேசியக் கல்வித் துறைச் செயலர் பேராசிரியர் கிருஷ்ணகுமார் அவர்களின் “குழந்தை மொழியும் ஆசிரியரும்” என்ற நூல், எழுத்தாளர் திரு.மாதவன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு அமைச்சர் அவர்களால் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. பேராசிரியர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் பேசுகையில் இரண்டு செய்திகளை மையப்படுத்தினார்.

    1.ஆசிரியர் கல்வி::-
    ஆசிரியர் பயிற்சிக் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆசிரியர்கள் சிறந்த சிந்தனையாளராக, நல்ல படைப்பாற்றலுடன் விளங்கி ஆசிரியர் பயிற்சிக் கல்வியில் ஒரு புத்தாக்க நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றார்,

    2.பெண் குழந்தைக்கான கல்வி :-
    தொடக்கப் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் புத்தகங்கள் அமையவேண்டும் என்றும் கூறிய பேராசிரியர், நாட்டின் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக விளங்கும் தமிழகம் இந்த இரு செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

    தமிழ்நாடு திட்ட இயக்குனர் திரு விஜயகுமார். இ.ஆ.ப (I.A.S), பள்ளி கல்வி செயலாளர் திரு.குற்றாலலிங்கம். இ.ஆ.ப (I.A.S), சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

    ‘மாற்றம்’ என்ற சொல் மட்டுமே மாறாதது, ஆகவே, இத்தகைய ஆரோக்கியமான மாற்றத்திற்கு மாணவர்கள், ஆசிரியர்களுடன் நாமும் கைகோர்ப்போம்,
    ”புத்தகப் பூங்கொத்தை”, மணம் நுகர்ந்து, மனம் மலர்ந்து வாழ்த்துவோம்.

    மக்கள் சக்தி இயக்கம்
    "நம்பு தம்பி நம்மால் முடியும்" மாத இதழ்.