Wednesday, March 12, 2008
புத்தகப் பூங்கொத்துத் தொடக்க விழா ( 11-03-2008)
கல்வியானது குழந்தைகளை மாகாத்மாவாக ஆக்க வேண்டியதில்லை மனிதனாக்கினால் போதும். எனும் வாசகத்தை வாசித்தவாறே, சென்னை காரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பூத்து மணம் வீசக் காத்துக்கொண்டிருந்த புத்தகப் பூங்கொத்து விழாவில் கலந்துகொண்டோம்.
செயல்வழிக்கற்றல் முறை தமிழகத் தொடக்கப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு கூறாக நூலகத்தை வகுப்பறைக்கே, அதுவும் மாணவன் கையெட்டும் அளவிற்கு கொண்டுவருவதே இந்தப் புத்தகப் பூங்கொத்தின்(Reading corner) நோக்கம், தமிழகம் முழுவதிலும் உள்ள 37463 பள்ளிகளிலும், சுமார் 5கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் கல்வித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களால் 11/03/2008 அன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தேசிய புத்தக நிறுவனம்(National Book Trust) மற்றும் குழந்தைகள் புத்தக நிறுவனத்தின் மூலம் 172 தலைப்பில் குறிப்பாக, இயற்கை,விளையாட்டு, தலைவர்கள் போன்ற தலைப்பிலான புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது.இந்த “புத்தகப்பூங்கொத்து” திட்டத்தின் மூலம் சுமார் 65லட்சம் மாணவர்கள் பயனடைவர் என அமைச்சர் கூறினார்
கட்சி மற்றும் கட்சித் தலைமை புகழ் பாடாமல் அமைந்த அமைச்சரின் பேச்சு நாம் எதிர்நோக்கும் நல்ல அரசியல்வாதிக்கான பண்புகளாகும். மேலும், அவரின் உரை முழுவதிலும் மாணவர்களையும் அவர்களின் கல்வியையும் ஒட்டியே அமைந்தது. புத்தகப்பூங்கொத்தை வெளியிட்ட அமைச்சருக்கு மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் நல்ல மணம் வீசும், மலர் பூங்கொத்துடன் வாழ்த்துகின்றோம்.
நமது இயக்கத்தோழர் திரு.செந்தில் ஆறுமுகம் அவர்கள் அமைச்சரைச் சந்தித்து, நமது மார்ச்சு மாத இதழைக் கொடுத்து, பொம்மிக்குப்பத்தின் மேல்நிலைப்பள்ளி விண்ணப்பத்தையும் தெரிவித்தார். அதற்கு அமைச்சர் ஏப்ரல் மாதத்தில் இதைப் பற்றி நினைவுபடுத்தச் சொன்னார்.
செயல் வழிக் கற்றல் முறைஎன்றால் என்னவென்று, இயங்கும் வகுப்பறைக்குச் சென்று, அது நடக்கும் முறையை அதை நடத்தும் ஆசிரியரிடமே கேட்டறிந்தோம், வகுப்புக்கள் முழுவதும் வண்ணமயமான அட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு, மாணவர்கள் சிந்திக்கும் வகையில் அட்டைகளாலாயே பாடங்கள் நடத்தப்படும். இந்த “செயல்வழிக் கற்றல்” தமிழகக் கல்வித்துறையில் ஒரு மைல்கல் தான். மாணவர்கள் பள்ளிக்கு வருகையில் எந்த புத்தகங்களும் எடுத்து வரவேண்டியதில்லை. கரும்பலகைகள் மாணவர்களின் உயரத்திற்கே வைத்து அவர்களே அதில் எழுத வழிவகை செய்கிறது. ஆசிரியர்களுக்கு இது சார்ந்து தனிப்பட்ட பயிற்சியும் பள்ளி, மற்றும் கல்வித்துறையால் வழங்கப்படுகிறது
மாணவர்களின் வாசிப்பை வளர்க்கும் இந்த புத்தகப் பூங்கொத்து மேலும் வகுப்பறையை அலங்கரிக்கும் என்பதில் ஐயமில்லை எனினும் பெரும்பாலும் அனைத்து புத்தகங்களும் மொழிபெயர்ப்பு புத்தகங்களாகவே உள்ளது. இதனால் அதில் உச்சரிக்கும் வார்த்தைகள் சற்று சிரமமாக இருக்கிறது. எளிமையான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி நேரடித் தமிழ்ப்புத்தகங்கள் வகுப்பறைகளில் இடம்பெறவேண்டும். இப்பள்ளியை சுற்றிப் பார்க்கையில் சுகாதாரமற்ற கழிவறைகளையும் காணநேர்ந்தது.
தேசியக் கல்வித் துறைச் செயலர் பேராசிரியர் கிருஷ்ணகுமார் அவர்களின் “குழந்தை மொழியும் ஆசிரியரும்” என்ற நூல், எழுத்தாளர் திரு.மாதவன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு அமைச்சர் அவர்களால் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. பேராசிரியர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் பேசுகையில் இரண்டு செய்திகளை மையப்படுத்தினார்.
1.ஆசிரியர் கல்வி::-
ஆசிரியர் பயிற்சிக் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆசிரியர்கள் சிறந்த சிந்தனையாளராக, நல்ல படைப்பாற்றலுடன் விளங்கி ஆசிரியர் பயிற்சிக் கல்வியில் ஒரு புத்தாக்க நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றார்,
2.பெண் குழந்தைக்கான கல்வி :-
தொடக்கப் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் புத்தகங்கள் அமையவேண்டும் என்றும் கூறிய பேராசிரியர், நாட்டின் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக விளங்கும் தமிழகம் இந்த இரு செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு திட்ட இயக்குனர் திரு விஜயகுமார். இ.ஆ.ப (I.A.S), பள்ளி கல்வி செயலாளர் திரு.குற்றாலலிங்கம். இ.ஆ.ப (I.A.S), சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
‘மாற்றம்’ என்ற சொல் மட்டுமே மாறாதது, ஆகவே, இத்தகைய ஆரோக்கியமான மாற்றத்திற்கு மாணவர்கள், ஆசிரியர்களுடன் நாமும் கைகோர்ப்போம்,
”புத்தகப் பூங்கொத்தை”, மணம் நுகர்ந்து, மனம் மலர்ந்து வாழ்த்துவோம்.
மக்கள் சக்தி இயக்கம்
"நம்பு தம்பி நம்மால் முடியும்" மாத இதழ்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment