நீர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு - திருக்குறள்
இன்று தண்ணீர் நாள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப் படுகிறது, ஐ.நா.வின் பொருளியல் மற்றும் சமூக குழுமத்தின் ஆய்வின்படி உலகில் 70% மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்கிறது.ஆண்டுதோரும் 5மில்லியன் மக்கள் மாசுபட்ட குடிநீரால் ஏற்படும் நோயின் மூலம் இறந்து விடுகின்றனர்,இது போரில் இறப்பவர்களை விட 10 மடங்கு அதிகம்,பெறும்பாலும் நிலத்தடிநீரை நம்பி இருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களில் ஆண்டுக்கு 4மீட்டர் அளவுக்கு நிலத்தடிநீர் குறைந்துகொண்டு வருகிறது.75000 கிராமமக்களின் நீராதாரமாக விளங்கிய “வைத்தார்னா” ஏரியை கோக்கோ கோலா நிறுவனம் விலை கொடுத்து வாங்கிவிட்டது.இதுபோன்று நீர் ஆதாரங்கள் தனியார்மயமாகும் போக்கும் அங்கங்கே அரங்கேற்றப்படுகிறது.
2025ல் இருக்கும் பெறும் பிரச்சனை குடிநீர் பிரச்சனை தான் என்றும் ஐ.நா அறிவித்துள்ளது.தினசரி செய்திகளில் “இன்றய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ற செய்தியோடு இன்றய “தண்ணீர் விலை நிலவரம்” எனும் செய்திவந்தாலும் ஆச்சிரியமில்லை.
தண்ணீரை சேமிப்போம்
தமிழக அரசின் 2008-09 ஆண்டிற்கான பட்ஜெட்டில், மாநில முக்கிய நதிகள் இணைக்கப்படும் எனும் அறிவிப்பு பாராட்டுக்குரியது,தமிழகம் போன்ற மாநிலங்களின் தண்ணீர் பற்றாக்குறைக்கும் நதிநீர் பங்கீட்டு பிரச்சனைக்கும் ஒரேத் தீர்வு தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் தான்.நமது மக்கள் சக்தி இயக்க நிறுவுனர் அய்யா திரு.எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் நடைபயணம் மேற்கொண்டதும் இதற்காகத்தான். ஆனால் இத்திட்டம் நிறைவேற்ற ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில்,தமிழக அரசின் மாநில நதிகள் இணைக்கப்படும், திட்டம் ஒரு முன்னோடியாக அமையும்.மத்திய அரசும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளது.
நன்றி : தினமலர்
வெள்ளக் காலங்களில் காவேரி ஆற்றில் பெருகும் உபரி நீரை,வறண்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்காக காவேரி - அக்னியாறு - கோரையாறு - பாம்பாறு, - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டமாக காவேரி ஆற்றின் குறுக்கே கட்டளை பகுதியில் தடுப்பணை கட்டும் திட்டம் 165கோடி செலவில் செயல்படுத்தபடும் என அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
ஆனால் இத்திட்டம் வெறும் கோப்புகளில் எழுதப்பட்டு “கானல் நீராகாமல்” தமிழகமெங்கும் “கானும் நீராகினால்” மகிழ்ச்சியே.
நம்மால் முடிந்த வரை தண்ணீரை வீணாக்கமலும் விரையமாக்காமலும் பயன்ப்படுத்த சர்வதேச தண்ணீர் நாளான இன்று உறுதிகொள்வோம்.
“யாருக்கு தண்ணீர் சொந்தம் என்பது”,
“தாகம் எடுப்பவனுக்கு மட்டும் தான்”, என்ற நிலை வரும்......
மக்கள் சக்தி இயக்கம்
நம்மால் முடியும் மாத இதழ்
Saturday, March 22, 2008
Monday, March 17, 2008
தரமணியில் தரைமட்டமாக்கப் பட்ட நீதி
திங்கள் கிழமை (17/03/2008) மாலை நமது மக்கள் சக்தி இயக்கத்திற்கு வந்த அவசர அழைப்பை ஏற்று தரமணியை அனுகினோம்.அங்கு கமலநாதன் என்பவரது வீடு இடிக்கப்பட்டு அலங்கோல நிலையில் இருந்தது. மேலும் விசாரிக்கையில் நமக்கு கிடைத்த தகவல்கள்....
சென்னை தரமணியில் கமலநாதன் 1993 முதல் வசித்து வருகிறார்.(1200 சதுர அடி).குடிசை மாற்று வாரியமும் 1997ல் அவருக்கே அந்த இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.அதற்கான தொகையையும் 1995-1996ல் அவர் வாரியத்திடம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் அங்கு வசிக்காத திரு.லலிதா கதிர்வேலுக்கும் அந்த இடம் (600 சதுர அடி)ஒதுக்கபட்டுள்ளதாக அறிந்த கமலநாதன்,குடிசைமாற்று வாரியத்தின் மீது வழக்கு தொடர்ந்தார்,இதை தொடர்ந்து குடிசை மாற்று வாரியம் திரு.லலிதா கதிர்வேலுக்கு ஒதுக்கீடு செயத்தை ரத்து செய்த ஆனைப் பிறப்பித்தது.மேலும் அதே இடத்தில் வசித்து வரும் தனக்கே அவ்விடத்தை ஒதுக்கவேண்டும் என வலியுருத்தி வழக்கும் தொடுத்துள்ளார் கமலநாதன்.இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிழுவையில் உள்ளது.
குடிசை மாற்று வாரிய இடத்தை வாங்குவதும் விற்பதும் சட்டப்படிக் குற்றம் அப்படி இருந்தும் நிலத்தில் எந்த வித உரிமையும் இல்லாத திரு.லலிதா கதிர்வேலு அந்த இடத்தை விஷ்னு என்பவருக்கு விற்று விட்டார்,தற்போது அதை காங்கிரஸ் பிரமுகர் தரமணி எஸ்.சார்லஸ் அவர்கள் வாங்கி,15/03/2008 அன்று காலை கமலநாதனின் வீட்டிற்கே சென்று தான் இந்த நிலத்தை வாங்கிவிட்டதாகவும் உடனடியாக இவ்விடத்தை காலி செய்யும் படி மிரட்டியுள்ளார்.இதனால் கமலநாதன் தரமணி J.7 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார், இதை விசாரித்த உதவி ஆய்வாளர் 17/03/2008 திங்கள்கிழமை காலை காவல் ஆய்வாளர் முன்னிலையில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று அனுப்பிவைத்துள்ளார். ஆனால் கதர்சட்டை காங்கிரஸ்காரர் சார்லஸ் தனது 15 ஆட்களுடன் மதியம்(15/03/2008) கமலநாதன் இடத்தை ஆக்கிரமித்து அங்கு உள்ள வாழை போன்றவற்றை வெட்டிசாய்த்து, மதில் சுவர் கட்ட ஆரம்பித்தனர்,தடுக்க முயன்றும் பயணில்லை,அஹிம்சையை மறந்து காங்கிரஸ்காரர் சார்லஸ் தொடர்ந்து அங்குள்ள குளியளரையை இடித்து ஒரு கொட்டகையும் அமைத்தார்.ஆனால் மீண்டும் அஹிம்சை வழியில் உரிமைக்காக காவல் துறையிடம் முறையிட விறைந்தார் கமலநாதன்.
காவல் நிலையத்தில் உள்ள ஏட்டு சக்திவேலை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்,ஏட்டு சக்திவேல் மதில் சுவர் கட்டுமானத்தை நிறுத்தி காவல் நிலையத்திற்கு வருமாறு சார்லஸிடம் கூறி சென்றுவிட்டார். கமலநாதனும் தன் மனைவியுடன் காவல் நிலையம் சென்றனர்.இச்சமயத்தில் வீட்டில் இருந்த கமலநாதனின் பதின்மவயது பெண்களை சார்லஸின் ஆட்கள் அரிவாள் கொண்டு மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் திங்கள் கிழமை (17/03/2008) அன்று காலை பேச்சுவார்த்தைக்கு காவல் நிலையம் வந்தார், ஆனையர் இல்லாததால் மாலை வரும்படி அனுப்பிவைக்கப் பட்டார்.ஆனால் அவர் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அன்று மாலை அவரது வீடு முற்றிலுமாக இடிக்கப்பட்டது,15/3/2008 புகார் கொடுத்த அன்றே துரிதமாக நடவடிக்கையை காவல் துறை எடுத்திருந்தால் கமலநாதனின் வீடு காக்கப் பட்டிருக்கும்.ஆனால் அவரது உடமைகள் தெருவில் வீசிஎறியப்பட்டன.தான் வசித்த தெருவில் தன் மனைவி மகளுடன் அகதியாக்கபட்டார் கமலநாதன்.கதர்சட்டைக்குத் தான் அகதிகள் கிள்ளுகீரையாயிற்றே.ஆனால் காவல் துறையும் கைகட்டி நின்றதுதான் வேதனையின் உச்சகட்டம்.
தான் வசித்த வீட்டிற்காக பதின்மவயது இரு பெண்கள் மற்றும் மனைவியுடன் போராடிக்கொண்டிருக்கும் கமலநாதனின் விடியளை எந்த "கை"கொண்ட காங்கிரஸ் காரரும் தடுக்க இயலாது. மக்களின் காவலன் காவல் துறை இதை பரிீசீலிக்குமா???
மக்கள் சக்தி இயக்கம்
மக்கள் சக்தி இயக்கம்
"நம்பு தம்பி நம்மால் முடியும்" மாத இதழ்.
Wednesday, March 12, 2008
புத்தகப் பூங்கொத்துத் தொடக்க விழா ( 11-03-2008)
கல்வியானது குழந்தைகளை மாகாத்மாவாக ஆக்க வேண்டியதில்லை மனிதனாக்கினால் போதும். எனும் வாசகத்தை வாசித்தவாறே, சென்னை காரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பூத்து மணம் வீசக் காத்துக்கொண்டிருந்த புத்தகப் பூங்கொத்து விழாவில் கலந்துகொண்டோம்.
செயல்வழிக்கற்றல் முறை தமிழகத் தொடக்கப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு கூறாக நூலகத்தை வகுப்பறைக்கே, அதுவும் மாணவன் கையெட்டும் அளவிற்கு கொண்டுவருவதே இந்தப் புத்தகப் பூங்கொத்தின்(Reading corner) நோக்கம், தமிழகம் முழுவதிலும் உள்ள 37463 பள்ளிகளிலும், சுமார் 5கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் கல்வித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களால் 11/03/2008 அன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தேசிய புத்தக நிறுவனம்(National Book Trust) மற்றும் குழந்தைகள் புத்தக நிறுவனத்தின் மூலம் 172 தலைப்பில் குறிப்பாக, இயற்கை,விளையாட்டு, தலைவர்கள் போன்ற தலைப்பிலான புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது.இந்த “புத்தகப்பூங்கொத்து” திட்டத்தின் மூலம் சுமார் 65லட்சம் மாணவர்கள் பயனடைவர் என அமைச்சர் கூறினார்
கட்சி மற்றும் கட்சித் தலைமை புகழ் பாடாமல் அமைந்த அமைச்சரின் பேச்சு நாம் எதிர்நோக்கும் நல்ல அரசியல்வாதிக்கான பண்புகளாகும். மேலும், அவரின் உரை முழுவதிலும் மாணவர்களையும் அவர்களின் கல்வியையும் ஒட்டியே அமைந்தது. புத்தகப்பூங்கொத்தை வெளியிட்ட அமைச்சருக்கு மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் நல்ல மணம் வீசும், மலர் பூங்கொத்துடன் வாழ்த்துகின்றோம்.
நமது இயக்கத்தோழர் திரு.செந்தில் ஆறுமுகம் அவர்கள் அமைச்சரைச் சந்தித்து, நமது மார்ச்சு மாத இதழைக் கொடுத்து, பொம்மிக்குப்பத்தின் மேல்நிலைப்பள்ளி விண்ணப்பத்தையும் தெரிவித்தார். அதற்கு அமைச்சர் ஏப்ரல் மாதத்தில் இதைப் பற்றி நினைவுபடுத்தச் சொன்னார்.
செயல் வழிக் கற்றல் முறைஎன்றால் என்னவென்று, இயங்கும் வகுப்பறைக்குச் சென்று, அது நடக்கும் முறையை அதை நடத்தும் ஆசிரியரிடமே கேட்டறிந்தோம், வகுப்புக்கள் முழுவதும் வண்ணமயமான அட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு, மாணவர்கள் சிந்திக்கும் வகையில் அட்டைகளாலாயே பாடங்கள் நடத்தப்படும். இந்த “செயல்வழிக் கற்றல்” தமிழகக் கல்வித்துறையில் ஒரு மைல்கல் தான். மாணவர்கள் பள்ளிக்கு வருகையில் எந்த புத்தகங்களும் எடுத்து வரவேண்டியதில்லை. கரும்பலகைகள் மாணவர்களின் உயரத்திற்கே வைத்து அவர்களே அதில் எழுத வழிவகை செய்கிறது. ஆசிரியர்களுக்கு இது சார்ந்து தனிப்பட்ட பயிற்சியும் பள்ளி, மற்றும் கல்வித்துறையால் வழங்கப்படுகிறது
மாணவர்களின் வாசிப்பை வளர்க்கும் இந்த புத்தகப் பூங்கொத்து மேலும் வகுப்பறையை அலங்கரிக்கும் என்பதில் ஐயமில்லை எனினும் பெரும்பாலும் அனைத்து புத்தகங்களும் மொழிபெயர்ப்பு புத்தகங்களாகவே உள்ளது. இதனால் அதில் உச்சரிக்கும் வார்த்தைகள் சற்று சிரமமாக இருக்கிறது. எளிமையான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி நேரடித் தமிழ்ப்புத்தகங்கள் வகுப்பறைகளில் இடம்பெறவேண்டும். இப்பள்ளியை சுற்றிப் பார்க்கையில் சுகாதாரமற்ற கழிவறைகளையும் காணநேர்ந்தது.
தேசியக் கல்வித் துறைச் செயலர் பேராசிரியர் கிருஷ்ணகுமார் அவர்களின் “குழந்தை மொழியும் ஆசிரியரும்” என்ற நூல், எழுத்தாளர் திரு.மாதவன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு அமைச்சர் அவர்களால் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. பேராசிரியர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் பேசுகையில் இரண்டு செய்திகளை மையப்படுத்தினார்.
1.ஆசிரியர் கல்வி::-
ஆசிரியர் பயிற்சிக் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆசிரியர்கள் சிறந்த சிந்தனையாளராக, நல்ல படைப்பாற்றலுடன் விளங்கி ஆசிரியர் பயிற்சிக் கல்வியில் ஒரு புத்தாக்க நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றார்,
2.பெண் குழந்தைக்கான கல்வி :-
தொடக்கப் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் புத்தகங்கள் அமையவேண்டும் என்றும் கூறிய பேராசிரியர், நாட்டின் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக விளங்கும் தமிழகம் இந்த இரு செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு திட்ட இயக்குனர் திரு விஜயகுமார். இ.ஆ.ப (I.A.S), பள்ளி கல்வி செயலாளர் திரு.குற்றாலலிங்கம். இ.ஆ.ப (I.A.S), சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
‘மாற்றம்’ என்ற சொல் மட்டுமே மாறாதது, ஆகவே, இத்தகைய ஆரோக்கியமான மாற்றத்திற்கு மாணவர்கள், ஆசிரியர்களுடன் நாமும் கைகோர்ப்போம்,
”புத்தகப் பூங்கொத்தை”, மணம் நுகர்ந்து, மனம் மலர்ந்து வாழ்த்துவோம்.
மக்கள் சக்தி இயக்கம்
"நம்பு தம்பி நம்மால் முடியும்" மாத இதழ்.
Subscribe to:
Posts (Atom)